உயிருக்கு உலை வைக்கும் நைட்ரஜன் பிஸ்கெட்... பெற்றோர்களே உஷார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வாயில் போட்டவுடன் குபு குபுவென கிளம்பும் புகை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்தவுடன் சுவைக்க தோன்றும் அளவிற்கு புதிதாக களமிறங்கியுள்ளது நைட்ரஜன் பிஸ்கெட். உணவுகளில் புதுமையை விரும்பிகள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற நைட்ரஜன் பிஸ்கட் மற்றும் ஐஸ்கிரீம்களை உண்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை தெரிந்து கொள்வோம் இந்த செய்தி தொகுப்பில்...

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்ட 90 கிட்ஸ் குழந்தைகள் போல இல்லாமல் நாக்கில் நாட்டியம் ஆடும் சுவைகளுக்காக விதவிதமான உணவுகளைத் தேடித் தேடி உணவுகளை உண்ணும் 2k கிட்ஸ், ருசி, புதுமை என இப்படி எதையும் பொருட்படுத்தாமல் எதையும் சாப்பிடும் 2024 சென்ஸி கிட்ஸ்கள். 

இப்படி இவர்களுக்கென புது புதுசா களமிறங்கியுள்ள ஜைட்ரஜன் பிஸ்கெட் போன்ற பல திண்பண்டங்கள் புது புது ரூபங்களில் உலா வந்தாலும் அவைகளை சலைக்காமல் வாங்கி உண்டு தங்களது உயிருக்கே உலை வைத்து கொள்கின்றனர் புதுமை விரும்பிகள்..

தற்போதைய தலைமுறையின் புதிய தேடலாக உருவாகியுள்ள நைட்ரஜனில் முக்கி எடுத்த இந்த வகையான பிஸ்கட்கள், ஐஸ்கிரீம்கள் சாப்பிடுவதால் மரணம் வரை நம்மை இட்டுச்செல்லும் என்று  சமூக ஊடகங்களில் உலவும் சில வீடியோக்கள் நம்மை நடுநடுங்க வைக்கிறது.

இப்படி வித்தை காட்டுவது போல் சுமோக்கிங் எபெக்ட்டில் கிடைக்கும் நைட்ரஜன்  உணவுகளின் ஆபத்து குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம் என்பதே காலக்கொடுமை...

உயிருக்கு உலைவைக்கும் இந்த திரவ நைட்ரஜனின் பயன்பாடு தான் என்ன? நைட்ரஜன் காற்றை -195டிகிரி செல்சியஸில் மிகவும் குளுமையாக்கும் பொழுது திரவ நிலைக்கு வரும்.  இந்த திரவ நைட்ரஜன் பல காலமாக உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குளிர்பானங்கள், இனிப்புகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றிலும் உணவு பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் கோழி, மீன், பால், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவற்றை குளுமையாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

உணவுப்பொருட்களை பாதுகாக்க திரவ நைட்ரஜன் எந்தளவுக்கு நன்மையோ, அதே அளவு ஆபத்தும் நிறைந்தது. அதாவது, திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எதையும் உறைய வைக்கும் தன்மை கொண்டிருக்கும் நிலையில், அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது. ஆக அதனை சிறிது விழுங்கினாலும் வயிற்றில் திரவ நைட்ரஜன் ஆவியாகி, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி மரணத்துக்கே வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஜைட்ரஜன் பிஸ்கெட் ஆபத்து வைரலாக பரவிய நிலையில் சென்னையில் பார், நட்சத்திர விடுதிகள் மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதன் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்திவருவதாகவும் நைட்ரஜனை கேளிக்கைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு சுற்றறிக்கை விடுத்து எச்சரிக்க உள்ளதாக கூறுகிறார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மருத்துவர் சதீஷ்குமார்.

அதிகம் விழிப்புணர்வு கொண்ட இன்றைய தலைமுறை புதுப் புது ஆச்சிரியங்களுக்கு ஆசைப்பட்டு  ஆபத்தை அறியாமல் உயிரிழப்புகள் வரை சந்திப்பது அனைவருக்கும் வருத்தத்தை தரும் நிலையில் அனைவரும் ஆபத்தில்லா ஆனந்தத்தை நாட வேண்டும் நம் விருப்பமாக உள்ளது.

Night
Day