எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக இருதய தனம் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 450ல் லிருந்து 500 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இடைவிடாது துடித்துக் கொண்டிருக்கும் இருதயத்தை பாதுகாப்பது குறித்து எப்படி, மருத்துவ நிபுணர்களின் அறிவுரை என்ன என்பதை பார்க்கலாம்.
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக விளங்குகிறது இருதயம். இருதயத்தில் ஏற்படும் பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒன்று. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1.7 கோடி மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 31 சதவீத இறப்புகள் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படுபவை.
இருதய நோய்கள் குறித்த ஆபத்தை குறைக்கவும், இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் எடுக்கும் முயற்சிகளில் ஒன்று தான் உலக இருதய தினம். 1999ம் ஆண்டு உலக இதய கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 450 முதல் 500 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
குறிப்பாக 30 முதல் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் மாரடைப்பால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்திருக்கிறது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், முறையான உடற்பயிற்சி இல்லாததே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வயது பாகுபாடு இன்றி இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இரண்டு மில்லி மீட்டர் அளவிற்கு ரத்தம் உறைவது, ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது, ரத்தக் குழாய் சுருங்குவது போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் அனைவருக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை, ஆஞ்சியோ போன்ற நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் தற்போது உள்ளன. நேர்மறை எண்ணத்துடன் உணவு மற்றும் உடற்பயிற்சியை கவனத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, சுரக்கும் எண்டாபின் என்ற ஹார்மோன் ரத்தக்குழாயில் ஏற்படும் கொழுப்பை தடுக்கிறது அல்லது கரைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்படுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களை யாரும் மறந்து விடக் கூடாது. அவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, போதிய நேரம் தூங்காதது, மன அழுத்தம் போன்றவையே சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.
ஓய்வின்றி உழைக்கும் இருதயத்தை பழுதின்றி பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மிக முக்கியமான கடமை என்று கூறினால் அது மிகையாகாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை கருத்தில் கொண்டு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது. நம்மை பாதுகாக்கும் இதயத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.