கண்மூடித்தனமான சிகிச்சையால் நுரையீரலை கெடுத்துவிட்டார்... பாதிக்கப்பட்டவர் பகீர் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திய நிலையில்,  தங்களது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்காததால் தான், இளைஞர் விக்னோஷ் ஆத்திரத்தில் மருத்துவரை தாக்கியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை கூட பார்க்காமல்  மருத்துவர் அலட்சியமாக பேசுவார் என பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பிரேமா, மனோகர்  தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். மனோகர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்ட நிலையில்,  மனைவி பிரேமாவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, இரண்டாம் கட்ட நிலையில் புற்றுநோய் உள்ளதால், விரைவில் அது குணமடைந்து விடும் என மருத்துவர்கள்  கூறியதாக தெரிகிறது.

ஆனால், தொடர்ந்து சிகிச்சை பெற பணம் இல்லாததால், கிண்டி கலைஞர் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், தாயார் பிரேமாவை அவரது மூத்த மகன் விக்னேஷ்வரன் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு புற்றுநோய் மருத்துவர் பாலாஜி உட்பட மருத்துவ குழுவினர் விக்னேஷ்வரனின் தாய் பிரேமாவுக்கு ஹீமோகிராபி சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், பிரேமாவிற்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவர் பாலாஜியிடம் விக்னேஷ்வரன் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் தாய் பிரேமாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதனிடையே அங்குள்ள மருத்துவர்கள், பிரேமாவுக்கு நுரையீரல் செயலிழந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சைக்கு பணம் இல்லாததால், மீண்டும் கிண்டி அரசு மருத்துவமனையில் தனது தாய் பிரேமாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார் விக்னேஷ்வரன்....

தனது தாய் படும் வலியை பார்க்க முடியாமல்  கடும் கோபத்தில் இருந்த விக்னேஷ்வரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், தனது மகன் மருத்துவரை கத்தியால் குத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தான் படும் வேதனையை பார்த்து, இது போன்று செய்து விட்டான்  எனவும் பாதிக்கப்பட்ட பிரேமா வேதனையுடன் கூறினார். மருத்துவர் பாலாஜி, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை கூட பார்க்காமல் அலட்சியமாக பேசுவார் என்றும் தெரிவித்தார்.

தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த தனது சகோதரர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாகவும்,  அண்ணன் இதய நோயாளி என்பதால் எதுவும் ஆகக் கூடாது என்றும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தனது தாய்க்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற ஆத்திரத்தில், விக்னேஷ்வரன் மருத்துவரை தாக்கியதாகவும், மருத்துவரும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினார்.  வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை எடுத்து சென்று விட்டதாகவும், விக்னேஷ்வரினின் தாய்க்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மருத்துவர்களின் அலட்சியமான பரிசோதனை மற்றும் சிகிச்சையால் நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு பிரேமா தள்ளப்பட்டதாக கண்ணீருடன் குற்றம்சாட்டுகின்றனர் விக்னேஷின் குடும்பத்தார்.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக அருணாச்சலத்துடன் செய்தியாளர் பத்மநாபன்.

Night
Day