கோவிஷீல்ட் போட்டவர்களுக்கு ஆபத்தா... அதிர்ச்சி தந்த நிறுவனம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா பெருந்தொற்றுக்கு பயன்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், கோவிஷீல்டு தடுப்பூசி செல்லுத்திக்கொண்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதன் அறிகுறிகள் என்ன என்பதை சற்றுவிரிவாக பார்க்கலாம்...

உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட காட்சிகள் தான் இவை...

கடந்த 2020ல் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. 

கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதன், செயல்திறன் 81 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன், செயல்திறன் 70 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 738 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தொற்றால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு வகை தடுப்பூசிகளை கோடிக்கணக்கானோர் செலுத்தினர். குறிப்பாக, இந்தியாவில் தட்டுப்பாடின்றி கிடைக்க பெற்ற கோவிஷீல்டு தடுப்பூசியையே பெரும்பாலானோர் செலுத்தியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 220 கோடியே 67 லட்சத்து 85 ஆயிரத்து 234 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசி 174 கோடியே 94 லட்சத்து 17 ஆயிரத்து 978 டோஸ்சும், கோவேக்சின் தடுப்பூசி 36 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 701 டோஸ்சும் செலுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே, ஸ்பூட்னிக் தடுப்பூசி 12 லட்சத்து 32 ஆயிரத்து 699 டோஸ்சும், கார்பிவேக்ஸ் 7 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 372 டோஸ்சும், கோவோவேக்ஸ் 54 ஆயிரத்து 932 டோஸ்சும் செலுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் உயிரிழப்புகளும், கடுமையான காயங்களும் நிறைய பேருக்கு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ஏற்பட்ட மர்ம மரணங்கள் தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது சந்தேகங்களை எழுப்பின. இதனையடுத்து, இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ஆயிரத்து 57 கோடி ரூபாய் வரை இழப்பீடு தொகை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கு தொடர்ந்த ஜேமி ஸ்காட் என்பவர், ஏப்ரல் 2021இல் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் இதனால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாகவும் வழக்கு தொடர்ந்தார். இதனால் தனது வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறினார்.

முதலில் இதற்கு எல்லாம் மறுப்பு தெரிவித்த, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் ஒன்றில் கோவிஷீல்டில் மிக அரிய வகையாக டிடிஎஸ் என்ற பாதிப்பு ஏற்படுமென தெரிவித்துள்ளது. டிடிஎஸ் என்பது த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் எனும் ரத்த உறைதல் நோயாகும். அவை, பிளேட்லெட் எனப்படும் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

இந்த டிடிஎஸ் பாதிப்பு 2 கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டத்தில் ரத்த உறைதல், ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு, மூளை அல்லது குடலில் அரிதான ரத்த கட்டிகள் உருவாதல், சில சமயங்களில் கால்கள் அல்லது நுரையீரலில் ரத்த உறைதல் ஏற்படலாம் - மேலும்,  முதல் கட்டத்தின் பாதிப்பு மிகவும் கடுமையாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

தொடர்ந்து, இந்த முதல் வகை பாதிப்பு இளம் வயதினரையே அதிகம் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2ம் கட்ட பாதிப்பில் கால்கள் அல்லது நுரையீரல் போன்ற பொதுவான ரத்த கட்டிகள் ஏற்படும் என்றும், ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சிந்தனையில் மாற்றம் போன்ற பிரச்னைகள் உள்ளிட்டவை டிடிஎஸ்-ன் அறிகுறிகளாகும். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதால், கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Night
Day