சென்னையில் மருத்துவர் மீதான தாக்குதல் - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் திரு. பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு திமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக அரசை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அப்புறப்படுத்துவதுதான் இதற்கு நிரந்தர தீர்வாகும் என்றும், புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர் திரு.பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு திமுக தலைமையிலான அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும் - இது போன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடியப் போகிறது - ஆனால், இன்று வரை தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது - தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவியர்கள், பெண்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அவலநிலை தொடர்ந்து இருந்து வருகிறது - இன்று காலையில் கூட மதுரையில் சாலையிலேயே, துண்டிக்கப்பட்ட மனிதரின் தலை கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் - தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை என நாள்தோறும் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது - திமுக தலைமையிலான அரசோ எதைப்பற்றியும் கண்டுகொள்வது இல்லை - ஆனால் திமுகவினர் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டதாக சொல்லிக்கொள்கின்றனர் - தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று திமுகவினர் காணும் பகல்கனவு கண்டிப்பாக பலிக்காது என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் - இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் - அதிலும் குறிப்பாக ஏழை, எளிய, சாமானிய மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், இன்றைக்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது - மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் நிலையில், பிரசவத்திற்காக வரும் ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களின் நலனையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக மிகுந்த பணிச்சுமைக்கு நடுவே அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மருத்துவர்களிடம் திமுக தலைமையிலான அரசு பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் போதிய பாதுகாப்பினை வழங்க தேவையான நடவடிக்கைளை திமுக தலைமையிலான அரசு உடனே எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார். 

மருத்துவத்துறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று - அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், மருத்துவர்களை தங்கள் உயிரை காக்கும் கடவுளாக கருதுகின்றனர் - எனவே, மருத்துவர்கள், பொதுமக்கள் யாரும் பாதிக்காதவகையில் தங்களது கோரிக்கைகளை, எதிர்ப்புகளை ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயக முறையில் தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக தலைமையிலான அரசை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அப்புறப்படுத்துவதுதான் இதற்கு நிரந்தர தீர்வாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day