எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் முழுவதும் பஜ்ஜி, போண்டா, வடை பார்சலுக்கு செய்தித்தாள்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது... காகித மையில் உள்ள வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளதால், பார்சலுக்கு செய்தித்தாளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது பற்றிய தொகுப்பை பற்றி சற்று விரிவாக காணலாம்...
தமிழகம் முழுவதும் காலை, மாலை வேலைகளில் சிற்றுண்டியாக டீக்கடைகளில் வடை, போண்டா மற்றும் பஜ்ஜி போடப்படுவது அனைவரும் அறிந்தது தான். அவற்றை பார்சல் செய்ய முந்தைய காலங்களில் வாழை இலை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே செய்தி தாள்களில் பார்சல் செய்யும் வழக்கம் உருவானது.
ஆனால் செய்தி தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் கலந்திருக்கும் வேதிப்பொருள் குறித்தோ, அதனால் விளையும் தீங்கு குறித்தோ டீக்கடை காரர்களும், பொதுமக்களும் யோசிப்பதே இல்லை. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திதாள்களை பயன்படுத்தி பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட திண்பண்டகளை பார்சல் செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார், அச்சிடப்பட்ட காகித மையில் உள்ள வேதிப்பொருட்கள் நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பை கேன்சரை உருவாக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் வடை போண்டா பஜ்ஜி போன்றவற்றை அச்சு பதிந்த காகிதங்கள், நாளிதழ்கள் போன்றவற்றில் மடித்துக் கொடுக்க கூடாது என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
செய்தித்தாள்களில் வண்ணங்கள் மற்றும் தடிமனான எழுத்துக்களை விரைவில் உலர்த்த பெட்ரோலிய பொருட்கள், மெத்தனால், பென்சீன், கோபால்ட் போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அத்தகைய அச்சிடப்பட்ட காகிதத்தில் வைக்கப்படும் உணவு பொருட்கள் தரமற்ற உணவாவதுடன், எண்ணெயும், வேதிப்பொருளும் உறிஞ்ச படுவதால், நோய் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது...
எனவே டீக்கடைகள் உணவகங்கள் சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருள் விற்பனை நிலையங்களிலும் பேக்கிங்கிற்கு அச்சுப்பதிந்த காகிதங்களையும், நாளிதழ்களையும் பயன்படுத்தக் கூடாது என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார், இலையில் வைத்து தான் பார்சல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் தடையை மீறி செய்தி தாள்களில் பார்சல் செய்தால், அத்தகைய உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.