எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயையை உண்டாக்கக்கூடிய ரொடமைன்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குழந்தைகள் அதிகளவில் ருசிக்க கூடிய திண்பண்டங்களில் ஒன்றாக திகழ்வது பஞ்சுமிட்டாய். தற்போது எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண நிறங்களில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்படுவதை நம்மால் காண முடியும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுச்சேரியில் கடற்கரை மற்றும் சுற்றுலாத்தலங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயையை உண்டாக்கக்கூடிய ரசாயனம் கலந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறையினர் பஞ்சுமிட்டாய்களை வாங்கி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் ரசாயணம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில், விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது ஆய்வு அறிக்கை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயையை உண்டாக்கக்கூடிய ரொடமைன்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட கூடாது என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரசாயனங்களை பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் பரிந்துரை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.