எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானுக்கு மகனாக, 1951ஆம் ஆண்டு மார்ச் 9ல் பிறந்த ஜாகிர் உசேன், தந்தையைப் பின்பற்றி சிறுவயது முதலே இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘தால்’ உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் ஜாகிர் உசேன் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஜாகிர் உசேன் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியது. ஆனால், இதனை அவரது குடும்பத்தினர் மறுத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர் உயிர் பிரிந்ததை குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். இசை சேவைக்காக ஜாகிர் உசேனுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமி விருதை 4 முறை வென்றவர் ஜாகிர் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.
தபேலா மேஸ்ட்ரோ என போற்றப்படும் ஜாகிர் உசேன் மறைவுக்கு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.