முதுகு தண்டுவட பாதிப்புக்கு இலவச சிகிச்சை வரப்பிரசாதமாய் அமைந்த சோல் ஃப்ரீ மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் மூலம் திருவண்ணாமலையில் அதிநவீன சிகிச்சைகளுடன், சுயதொழில் பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையம் பிரத்தியேகமாக திருவண்ணாமலையில் இயங்கி வருவது வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

திருவண்ணாமலை நகரில் உள்ள யோகிராம் சுரத்குமார் ஆசிரமம் அருகே வசிக்கும் சீனிவாசன்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் ப்ரீத்தி சீனிவாசன். முதுகலை பட்டம் பெற்ற இவர், கடந்த 1998-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் கழுத்திற்கு கீழ் எந்த ஒரு அசைவுகளும் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிகாகோ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற அவர், தன்னை போல் எந்த ஒரு பெண்ணும் பாதிக்கக் கூடாது என கருதி, அவரது பிறந்த மண்ணான திருவண்ணாமலையில், கடந்த 11 ஆண்டுகளாக சோல் ஃப்ரீ மையத்தை அமைத்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சையும், பயிற்சியும் முற்றிலும் இலவசமாக அளித்து வருகிறார்.

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே இயங்கி வரும் சோல் ஃப்ரீ மையம் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.

விபத்து ஏற்பட்டு 90 சதவிகிதம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண் தன்னை போல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பயிற்சி மையம் வைத்து செயல்பட்டு வருவதை, பலரும் பாராட்டி உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் முதல் முதியோர் வரை இந்த பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வரும் நபர்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து அவர்களுக்கான மன தைரியத்தை வரவழைத்து சிகிச்சை பெற வைப்பதே சோல் ஃப்ரீ மையத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தன் சொந்த காலில் நிற்க அவர்களுக்கு போதுமான ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. குறிப்பாக மரம் ஏறும் நபர்கள், படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த நபர்கள், உயரத்தில் சுவர்களுக்கு வர்ணம் பூசி கீழே விழுந்தவர்கள், இது மட்டுமல்லாமல் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்கள் என பல்வேறு வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 35 நபர்கள் தற்போது இந்த பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மையத்தில் சிகிச்சை மட்டும் அளிக்காமல் அவர்களாகவே தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யப்பட்டு வருகிறது, கணினி பயிற்சி, செல்போன் சீர்திருத்த பயிற்சி, மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சி என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தற்போது தங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டு சிகிச்சை பெறும் நேரத்தை விட பயிற்சி பெரும் நேரத்தையே அதிகமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சை பெறும் நபர்களை அமர வைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் மன உறுதியை அதிகப்படுத்துவதையே இந்த சிகிச்சை மையம் குறிக்கோளாக கொண்டுள்ளது.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்த பல நபர்கள் சோல் ஃப்ரீ மையத்தில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று தற்போது சுய தொழிலை கற்றுக்கொண்டு வெளியே சென்று சுயமாக வாழ்ந்தும் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டு பல்வேறு வகையில் காப்பீட்டு தொகையை வைத்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இதுவரை காப்பீடு என்பது இல்லை என்ற நிலையே இருந்து வருகிறது. இதற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கினால் படுக்கையில் கிடந்து இறக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. 

Night
Day