எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் முடிவடைந்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிகட்டுக்கு பெயர்போன மதுரை அவனியாபுரத்தில் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முன்னதாக வாடிவாசல் முன்பு தேங்காய் நார் பரப்பும் பணிகள் நடைபெற்றன. போட்டி நடைபெறும் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கும், காளைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் QR கோடுடன் கூடிய ஆன்லைன் டோக்கன் வைத்திருக்கும் காளை உரிமையாளர்களுக்கும்,மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான விளையாடி அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு சுமார் 8 லட்சரூபாய் மதிப்பிலான சொகுசு காரான நிசான் கார் பரிசளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிறப்பாக களம் கண்டு வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு சுமார் 11 லட்ச ரூபாய் மதிப்பிலான ஈச்சர் டிராக்டர் பரிசளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க, நாணயங்கள், மிக்சி கிரைண்டர், கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் ஆகிய பரிசு பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், திருப்பரங்குன்றம் செல்லும் அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம்- முத்துப்பட்டி சந்திப்பில் காளைகளை இறக்கிவிட வேண்டும் அறிவுறுத்தி உள்ளது. பின்னர் அந்த வாகனங்களை வைக்கம் பெரியார் நகர் ரோடு மற்றும் வெள்ளக்கல் கிளாட்வே கிரவுண்டு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.