அஸ்வினின் 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.   

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் மட்டும் அஸ்வின் விளையாடினார். இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் இன்று அறிவித்தார். இந்த ஓய்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.  

பிரிஸ்பேனில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும், தமக்கு இதுதான் கடைசி நாள் என்று கூறினார். ஒரு கிரிக்கெட் வீரராக தமக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்வதாக கூறிய அவர், க்ளப் அளவில் அதை வெளிப்படுத்த விரும்பதாகவும் தெரிவித்தார். 

இத்தனை நாள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிசிசிஐக்கும், எனது சக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதாக கூறிய அஸ்வினை, ஆரத்தழுவி வழியனுப்பினார் ரோகித் சர்மா. தொடர்ந்து அஸ்வினின் ஓய்வு குறித்த சீக்ரெட்டை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா, முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெர்த்துக்கு தாம் வந்த போதே ஓய்வு முடிவை அஸ்வின் தம்மிடன் தெரிவித்துவிட்டதாக கூறினார். இந்திய அணியின்  மேட்ச் வின்னர்களில் ஒருவரான அஸ்விவின் முடிவை மதிக்க வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்தார் ரோகித் சர்மா. 2010ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணியில் அஸ்வின் அறிமுகமானார். தனது அபாராமான சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அஸ்வின், விக்கெட்டுகளை குவித்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். வழக்கமான சுழற்பந்து வீச்சுடன் arm ball மற்றும் carrom ball ஆகியவையும் இவரின் சிறப்பம்சமாகும். 

2011ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் அவர் 2ம் இடத்தில் உள்ளார். 639 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் அனில் கும்ளே முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் உள்பட 3 ஆயிரத்து 503 ரன்களை அஸ்வின் எடுத்துள்ளார். 37 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ள அஸ்வின், இந்த பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.

116 ஒரு நாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015-16 சீசனில் 8 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 336 ரன்களையும் எடுத்த அஸ்வின், 2016ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை பெற்றார். 2015ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி அஸ்வின் கவுரவிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.





Night
Day