எழுத்தின் அளவு: அ+ அ- அ
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப்போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், போட்டியை வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தது. 4 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அத்துடன் 10 ஆண்டுகளுக்கு பின்பு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றது. இங்கிலாந்தில் வரும் ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன், ஆஸ்திரேலியா அணி மோதவுள்ளது.