எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் வேகப்பந்து வீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று துவங்கியது. தனிப்ட்ட காரணங்களுக்காக ரோகித் சர்மா விலகியதை அடுத்து இந்த போட்டிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் பும்ரா பேட் செய்வதாக அறிவித்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய நிலையில், விராத் கோலி 5 ரன்களிலும், கே எல் ராகுல் 26 ரன்களிலும், துருவ் ஜுரெல் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சற்று தாக்குப்பிடித்த நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக பும்ரா சிம்மசொப்பனமாக இருந்தார். மெக்ஸ்வீனி, கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், லாபுசேன், கம்மின்ஸ் ஆகியோர் ரன் எடுக்கத் திணறி சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னும் 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.