எழுத்தின் அளவு: அ+ அ- அ
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர். இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 28 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் அவுட்டாகினர். 3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 91 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வலுப்படுத்தினர். இதையடுத்து ஷ்ரேயஸ் அய்யர் 45 ரன்களில் வெளியேறினார். சதம் விளாசுவார் என்று எதிர்பாக்கப்பட்ட விரோட் கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா நிதானமான ஆடி பதற்றத்தை தணித்தனர். இருப்பினும் 28 ரன்களில் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. கே.எல்.ராகுல் 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.