எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மிகவும் இளம் வயதில் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நாட்டை மிகவும் பெருமைப்பட செய்துள்ளார் என்றும், இவரது சாதனை மூலம் இந்தியா செஸ் விளையாட்டில் ஆற்றல் மிக்க நாடு என்பதை முத்திரை பதித்துள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக குகேஷ் வருங்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துவதாகவும் குடியரசுத் தலைவர் முர்மு பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குகேஷின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவரது ஒப்பற்ற திறமை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, உறுதியின் விளைவே இந்த வெற்றி என பாராட்டு தெரிவித்துள்ளார். குகேஷின் வெற்றி செஸ் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமின்றி கோடிக்கணக்கான இளைஞர்கள் மிகப்பெரும் கனவு காணவும், சிறந்து விளங்கவும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் குகேஷ், நாட்டை பெருமைப்படுத்தி உள்ளதாகவும், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறுவது பெரும் சாதனை என பாராட்டு தெரிவித்துள்ளார். குகேஷின் ஆர்வம், உழைப்பு, உறுதி எதுவும் சாத்தியம் என்பதை நினைவூட்டுவதாகவும் ராகுல்காந்தி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.