எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்று மதியம் தொடங்குகிறது.
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இந்தியாவை தாண்டி வெளி நாடுகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்திற்கு ஆயிரத்து 574 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், இறுதியாக 574 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில், 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்களாக ரிஷப் பண்ட், ஜோஸ் பட்லர், ஷ்ரேயஸ் ஐயர், ரபாடா, அர்ஷ்தீப் சிங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர். அதே போல் கே.எல்.ராகுல், கான்வே, குவிண்டன் டி காக், டேவிட் வார்னர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அந்தந்த அணிகளால் தக்கவைக்கபடாததை அடுத்து எந்த அணி, அவர்களை ஏலத்திற்கு எடுக்க போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு அணியிலும் தேவையான வீரர்கள் தக்கவைக்கபட்டுள்ள நிலையில், 120 கோடி இருப்புத் தொகையில் இருந்து, மெகா ஏலத்திற்காக ஒவ்வொரு அணிகளும் குறிப்பிட்ட தொகையை இருப்பு வைத்துள்ளன. அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110 புள்ளி 5 கோடியும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 41 கோடியும் உள்ளது. அதே சமயம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 83 கோடியும், டெல்லி கேபிடல்ஸ் அணி 73 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடியும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 45 கோடியும் இருப்புத் தொகையாக வைத்துள்ளன. இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு துவங்கும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.