எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இருப்பதாக கூறி இருவரிடம் 50 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்துள்ளார் ஒருவர். எப்படியாவது டிக்கெட்டை வாங்கிவிடவேண்டும் என ஆசையில் இருக்கும் இளைஞர்களை குறிவைத்த நபர் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
17வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
போட்டியை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை போரூரைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரும், ராமாபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவரும் கள்ளத்தனமாக
டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாக்கத்தில் உள்ள ஏழாம் நம்பர் கேட் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஒருவர், தான் சேப்பாக்கம் மைதானத்தில் காவலாளியாக வேலை பார்ப்பதாகவும், தம்மிடம் போட்டிக்கான டிக்கெட்டுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும், காவலாளி உடை அணிந்திருந்த அந்த நபரிடம் தலா 25,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். அதை வாங்கிக் கொண்ட அந்த நபர், பெல்ஸ் சாலையில் உள்ள 15-ம் எண் கேட்டிற்கு வந்தால் டிக்கெட் தருவதாக கூறிச் சென்றுள்ளார்.
அதை நம்பி சென்ற இருவருக்குமே ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பணத்தை இழந்தவர்களிடம் மோசடி நபர் கொடுத்த செல்போன் எண் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், கொடுங்கையூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், டிக்கெட் வாங்கும் ஆர்வத்தில் வருபவர்களை குறிவைத்து அவர் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபரை சிறையில் அடைத்த போலீசார், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.