எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இதனையடுத்து வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா - ஸ்பெயின் அணிகள் தலா ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் இருந்தனர். ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கோல் அடித்து, 2க்கு 1 என இந்தியாவை முன்னிலைக்கு கொண்டுவந்தார். அதன்பின்னர் இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, ஸ்பெயின் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. பரபரப்பான ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், ஸ்பெயினுக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தபோதும், அதனை அவர்களால் கோலாக மாற்ற முடியவில்லை. இறுதியில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதற்கு முன்பு கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.