கிங், ஹிட்மேனை தொடர்ந்து டி20க்கு குட்பை சொன்ன ஜட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியின் மூலம் நாட்டுக்காக தனது பணியை தொடர்வேன் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்த ரவீந்திர ஜடேஜாவின் டி20 கிரிக்கெட் பயணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

ரவி இந்திரன் ஜடேஜா... ஜட்டு என அனைவராலும் அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா,
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராகவும், துடிப்பான பீல்டராகவும் வலம் வருகிறார். 
இடது கை பேட்டிங், இடது கை பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமைகளை திறம்பட செயல்படுத்தக் கூடிய ரவீந்திர ஜடேஜா, கடந்த 2008ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்காற்றினார். 

அந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, கடந்த 2009ஆம் அண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார் ரவீந்திர ஜடேஜா. 

ஒருநாள் போட்டியில் அறிமுகமான அடுத்த சில தினங்களிலேயே டி20 போட்டியிலும் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார் ரவீந்திர ஜடேஜா.. யுவராஜ் சிங்குக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்கு கிடைத்துள்ள நிரந்தர ஆல்ரவுண்டர் என முன்னாள் வீரர்களால் வர்ணிக்கப்பட்டார்.

யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடித்த ரவீந்திர ஜடேஜாடு, பல போட்டிகளில் வெற்றியையும் தேடித்தந்துள்ளார். இதுவரை 74 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி, 515 ரன்களும் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஜடேஜாவுக்கு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருந்தது.

அந்த கனவு, தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் நனவாகியுள்ளது. 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை
இந்திய அணி வென்ற உற்சாகத்தில் ரசிகர்கள் திளைத்த வேளையில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்தனர்.

அவர்களை தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவீந்திர ஜடேஜா அனைவருக்கும் நன்றி என்றும், நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் உறுதியான குதிரை, பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இன்று நனவாகியுள்ளதாகவும், இது தனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம் என்றும், வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் அளித்த அனைவருக்கும் நன்றி என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியின் மூலம் நாட்டுக்காக தனது பணியை தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம், இந்திய ரவீந்திர ஜடேஜா ஆற்றிய பங்களிப்பை பகிர்ந்து, நெகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Night
Day