கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நேரு விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சாம்பியன்களை உருவாக்‍கும் பூமி தமிழகம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து சாலை வழியாக நேப்பியர் பாலம்,  சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகையைக் கடந்து நேரு விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தார். 

அப்போது வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்‍கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அவர் செல்லும் வழிகளில் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. காரில் இருந்தபடி மக்களுக்கும் தொண்டர்களுக்கும் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார்.

இதனைதொடர்ந்து நேரு விளையாட்டரங்கிற்கு சென்ற பிரதமர் மோடி, வண்ணமையமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிக்‍களை தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வணக்‍கம் சென்னை என தமிழில் தனது உரையை தொடங்கினார்.  போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள  வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்த உணர்வை தருவதாக  நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விளையாட்டில் தமிழகத்திற்கென்று ஒரு இடம் உள்ளதாகவும், இது சாம்பியன்களை உருவாக்‍கும் பூமி எனவும் பெருமிதத்துடன் கூறினார். பாராலிம்பிக்‍ போட்டிகளில் பதக்‍கம் வென்ற மாரியப்பன் தமிழ் மண்ணின் மைந்தன் என்றும்,  விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாம்பியன்களை தமிழ்நாடு உருவாக்‍கி வருவதாகவும் தெரிவித்தார். 

விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைக்‍கும் நாடாக நம் நாட்டை மாற்ற விரும்புவதாக தெரிவித்த பிரதமர், இளைஞர்களின் ஆற்றல் புதிய இந்தியாவை உச்சத்துக்‍கு கொண்டு செல்லும் என்றும் குறிப்பிட்டார். 

விளையாட்டுப்போட்டியில் சிலம்பத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 
கேலோ இந்தியா விளையாட்டு சின்னமாக வீரமங்கை வேலு நாச்சியாரின் உருவத்தை பொறித்ததை கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வத்துடன் இருப்பதாக கூறிய பிரதமர் , அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்:  பெருமை முயற்சி தரும் 
என்ற தொடங்கும் திருக்‍குறளை மேற்கோள் காட்டினார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிக்‍கான தொடக்‍க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக்‍ தாக்‍கூர், எல். முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக ஒளிபரப்பு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், புதுப்பொழிவுடன் டிடி தமிழ் சேனலின் ஒளிபரப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், டிடி பொதிகை சேனல் இனி, டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. மேலும், 8 மாநிலங்களில் 12 ஆகாசவாணி பண்பலை ஒலிபரப்பு கோபுரங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Night
Day