டி20-க்கு குட்பை... விடை பெற்றார் ஹிட்மேன்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

20 ஓவர் உலக கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. தன்னுடைய ஓய்வை அறிவித்த ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் டி20 கிரிக்கெட் பயணங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

அதிரடி ஆட்டத்திற்கும் புல் ஷாட்டுக்கும் பெயர் போனவர்தான் நம்ம ரோஹித் சர்மா.. ஹிட்மேன் என ரசிர்களால் கொண்டாடப்படும் இவர், ஐந்து ஓவர்கள் களத்தில் நின்று விட்டால் அவரை எப்படி வெளியேற்றுவது என தெரியாமல் எதிரணி வீரர்கள் விழிப்புதுங்கி நிற்பார்கள்.

பந்து வீச்சாளர்கள் அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று திணறிக் கொண்டு இருக்க எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தன்னை நோக்கி வரம் பந்தை சிக்ஸருக்கு விளாசுவார் ரோஹித் சர்மா.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாகி உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்தார். 

தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர், டி20 போட்டியில் அதிவேக சதத்தையும் விளாசி உள்ளார். இவ்வாறு தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்த ஹிட் மேனுக்கு, 2022 ஆம் ஆண்டு கேப்டன் பதவி தேடி வந்தது. அப்போதைய கேப்டன் விராட் கோலி, பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா.. 

அப்போது, நிச்சயமாக இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தருவேன் என சபதம் ஏற்றார் ரோஹித் சர்மா. அதே சபதத்துடன் அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை அரையிறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால் அந்த ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக நூலிலையில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இந்தியா வெளியேறியது. 

தோல்வியை கண்டு சிறிதும் தளராத ரோஹித் சர்மா, நடப்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல், இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியையும் வென்று உலகக்கோப்பை வென்று கொடுப்பேன் என்ற சபதத்தை நிறைவேற்றியுள்ளார். அத்துடன், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று தந்து பெருமை சேர்த்துள்ளார் ரோஹித் சர்மா.

37 வயதான ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக 159 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ஐந்து சதம் மற்றும் 32 அரைசதத்துடன், 4 ஆயிரத்து 231 ரன்களை குவித்துள்ளார். 

தன்னுடைய சிறந்த தலைமை திறனின் மூலம் பல தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ரோஹித் தற்போது நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் அதனை நிரூபித்துள்ளார். 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று விடும் என்ற நிலை இருந்தபோது, அனைவரும் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது என நினைத்திருந்தனர். ஆனால் ரோஹித் சர்மாவோ துளியும் மனம் தளராமல் தன்னுடைய யுக்திகளால் கடைசி ஐந்து ஓவரில் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ் மேன்களை திணறடித்து வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

17 ஆண்டுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் மைதானத்தில் கண் கலங்கிய ரோஹித் சர்மா, கோப்பையை கையில் ஏந்திய சில நிமிடங்களிலேயே 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவையும் அறிவித்துள்ளார். 

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, 20 ஓவர் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதாகவும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஹிட்மேனின் இந்த ஓய்வு அறிவிப்பை எதிர்பாராத ரசிகர்கள், ரோஹித் சர்மாவின் சாதனைகளை நினைவு கூர்ந்து ஹிட்மேனுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். 

Night
Day