தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாபில் கபடி விளையாட சென்ற தமிழக வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவுல் அட்டாக் செய்தது குறித்து கேட்ட தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலி உள்ளிட்டவை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025ம் ஆண்டுக்கான மகளிர் கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு துவங்கிய போட்டியில் தமிழகத்தின் மதர் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் - பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணிக்கும் நடந்தது. அப்போது, தமிழக வீராங்கனை மீது பீகார் வீராங்கனை ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பவுல் அட்டாக் தொடர்பாக புகார் அளித்த தமிழக வீராங்கனை மீது போட்டியின் நடுவர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.




இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியபோது, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




 அப்போது வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதால், பீகார் - தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.





தாக்குதலின்போது அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டு மோதிக்கொண்டதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.



இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போட்டி நடத்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






Night
Day