எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை திரளானோர் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி விமரிசையாக நடைபெற்றது. முத்தப்புடையான்பட்டி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் முன்புள்ள திடலில் நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி சீறிப் பாய்ந்தன. சுற்றுவட்டாரப் பகுதிமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கைத்தட்டி, ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பணமும், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன.