எழுத்தின் அளவு: அ+ அ- அ
துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸ் பந்தயத்தின் ஒரு போட்டியிலிருந்து விலகுவதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அஜித் மற்றொரு போட்டியில் ஓட்டுநராக தனது பந்தயத்தை தொடருவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அது குறித்து பார்க்கலாம் இந்த செய்திதொகுப்பில்....
தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட்பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படங்கள் திரைக்கு வர உள்ளன. குறிப்பாக விடாமுயற்சி திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூழலில், அஜித் தீவிர பயிற்சி மேற்கொண்டு கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது துபாயில் 24H கார் ரேஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.....
கடந்த சில நாட்களுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்தின் கார் திடீரென விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அஜித்துக்கு காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று துபாயில் நடந்த கார் ரேஸ் தகுதிச்சுற்றில் நடிகர் அஜித்தின் குழு 7 ஆவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து துபாயில் அஜித் தலைமையிலான குழுவினர் பங்கேற்றுள்ள 24H கார் பந்தயம் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது....
இன்று பிற்பகல் வரை நடைபெற உள்ள கார் பந்தயத்தில் குழுவில் உள்ள நான்கு பேரும் சுமார் 6 மணி நேரம் கார் ஓட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார் ரேஸ் ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே அஜித்தின் குழு சார்பில் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தை கருத்தில் கொண்டு அணியின் நலனையும், அஜித்குமாரின் நலனையும் முன்னிறுத்தி 24H கார் ரேஸிலிருந்து அஜித்குமார் குறிப்பிட்ட போட்டிகளில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது...
ஆனால், போர்ஸ்ச்சே 992 கப் கார் ரேஸில் அணியின் உரிமையாளராகவும், போர்ஸ்ச்சே கேமன் GT4 பிரிவில் ஓட்டுநராகவும் அஜித்குமார் பங்கேற்க உள்ளதாகவும், இரண்டு கார் பந்தையங்களுக்கும் அனைவரும் ஆதரவை கொடுக்க வேண்டும் என அஜித் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பந்தயத்திற்கு முன்னதாக பேட்டியளித்த நடிகர் அஜித், பந்தயத்தை காண இவ்வளவு ரசிகர்கள் கூடுவார்கள் என தான் நினைக்கவில்லை என்றும், அங்கு கூடியிருக்கும் ரசிகர்கள் மீது தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னை பொறுத்தவரை சினிமா, ரேஸ் இரண்டும் ஒன்று தான் என்றும், இரண்டுக்கும் மன வலிமையும், உடல் வலிமையும் தேவை என்றார். தனக்கு ஒரே நேரத்தில் நிறைய வேலைகள் செய்ய பிடிக்காது என்பதாலேயே, ரேஸ் இல்லாத நேரங்களில் படங்களில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், போட்டியை கண்டு நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், அவரது ரசிகரான அருண் என்பவர் போட்டியின் நடுவே வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனாலும், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தனது சொந்த அணியில் பங்கேற்காமல், மற்றொரு அணி மூலம் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதால், அவருடைய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.