பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரும், காதல் நகருமான பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை வழக்கத்திற்க மாறாக சென் நதிக்கரையில் தொடக்க விழா நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், 117 பேர் கொண்ட இந்திய அணியும் இந்த ஒலிம்பிக் தொடரில் களம் காண்கிறது. இந்நிலையில் பாரிஸ் நகரின் சென் நதிக்கரையில் ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 100 படகுகளில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசியக் கொடியை ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர். இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றனர்.

வழக்கமாக பெரிய மைதானத்தில் நடத்தப்படும் ஒலிம்பிக் துவக்க விழா இந்த முறை பாரிஸ் சென் நதிக்கரையில், திறந்தவெளியில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடக்க விழாவின் போது மழை பெய்ததால் வீரர்கள் அனைவரும் நனைந்தபடி படகில் சென்றனர். மேலும், திறந்தவெளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும், பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் அதைக் காண வந்திருந்த மக்கள் என அனைவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி தொடக்க விழாவை கண்டு ரசித்தனர். 

இதனைதொடர்ந்து பிரான்சின் ஜோதி வீரர்களான ஜூடோகா டெடி ரைனர் மற்றும் ஸ்ப்ரிண்டர் மேரி ஜோ பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் கொப்பரையை ஏற்றிவைத்தனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இந்த துவக்க விழாவில் பங்கேற்று அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day