எழுத்தின் அளவு: அ+ அ- அ
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி காலமானார். அவருக்கு வயது 60.
திரைப்படம், வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹுசைனி இன்று அதிகாலை காலமானார். பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அவருடை உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இறக்கும் முன்பு முகநூல் பக்கத்தில் ஹுசைனி வெளியிட்டிருந்த பதிவில், மருத்துவம் மற்றும் உடற்கூறாய்வு ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்ய விரும்புவதாக கூறி இருந்தார். மேலும் தனது இதயத்தை பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
தான் இறந்த பின்னர் கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சீருடையுடன் வந்து தனக்கு அஞ்சலி செலுத்துமாறும் ஹுசைனி கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்த ஹுசைனி 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். வேலைக்காரன், பத்ரி, காத்துவாக்குல ரெண்டு காதல், உன்னை சொல்லி குற்றமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, தமிழக வில்வித்தை சங்க நிறுவனராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.