வரலாற்று சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் மெகா ஏலத்தில் லக்னோ அணி அவரை வாங்கியுள்ளது. தமிழக வீரர்களான அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே மாதம் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை முடிவடைந்த நிலையில், ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. 574 வீரர்கள் இறுதி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். 

2 நாட்கள் நடைபெறும் மெகா ஏலத்தை முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் நடத்தி வருகிறார். முதல் நாளான ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஏலத்தில், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட் -ஐ, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி வசப்படுத்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற ஸ்ரேயாஸ் அய்யரின் சாதனையை சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் முறியடித்தார். 

முன்னதாக, கடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் அய்யர் 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியில் இணைந்தார். அடுத்ததாக அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வெங்கடேஷ் அய்யர். இவரை 23 கோடியே 75 ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. 2021 சீசனில் இருந்து கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் அய்யர், இம்முறையும் அந்த அணியில் தொடர்கிறார். 

வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தி 18 கோடி ரூபாய்க்கு வாங்கி பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டது. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை வாங்க, அவருடைய முந்தைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும். குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில், 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அவரை குஜராத் அணி வாங்கியது. 

ராஜஸ்தான் அணியால் தக்க வைக்கப்படாத சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திரா சாஹலை, 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் வாங்கியது. கே எல் ராகுலை வாங்க கொல்கத்தா, பெங்களுரூ, டெல்லி அணிகள் போட்டி போட்ட நிலையில், 14 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் தட்டிச் சென்றது.  

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இஷான் கிஷனை 11 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் வசப்படுத்தியது. ஆர்சிபிக்காக விளையாடி வந்த முகமது சிராஜை வாங்க குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 12.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது. 

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரை 7.50 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை 8.75 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மண்ணின் மைந்தரான ரவிச்சந்திரன் அஸ்வினை 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 2009 முதல் 2015 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அஸ்வின், 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். சச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்த சிஎஸ்கே, ராகுல் திரிபாதியை 3 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும், வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை 10 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 

தமிழக வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை 9.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏலம் எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்-கை 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும், இங்கிலாந்தின் பில் சால்ட்டை 11.5 கோடி ரூபாய்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரை 12.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கின. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்-டை 12.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்-ஐ 12.50 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலத்தில் வாங்கின. 

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை 

Night
Day