வினேஷ் போகத் தகுதி நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக்கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியனும், 4 முறை உலக சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 82 வெற்றிகளை பெற்ற யு சுசாகியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதனைதொடர்ந்து காலிறுதி சுற்றில் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை 7க்கு 5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய வினேஷ் போகத், நேற்று நடைபெற்ற அரையிறுதியில், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை 5க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் வினேஷ் போகத் படைத்தார். இதனால், பாரிஸ் ஒலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம் உறுதியான சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தங்கம் வென்று  வினேஷ் போகத் வரலாறு படைப்பார் என்றும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட வினேஷ் போகத்தின் உடல் எடை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாகக்கூறி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. 

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதை காரணம் காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

Night
Day