18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா... 13 இடங்களில் பிரம்மாண்ட தொடக்க விழா...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தாண்டு போட்டிகள் நடக்கும் 13 இடங்களிலும் தொடக்க விழா மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

ஐபிஎல் எனும் கோடைகால கிரிக்கெட் திருவிழா, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 17 தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறையும், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒருமுறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. தொடரில் 10 அணிகள் பங்கேற்றாலும், தலா 5 முறை கோப்பையை வென்று சென்னை மற்றும் மும்பை அணிகளே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதனால், சென்னை, மும்பை அணிகள் மீதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் உள்ளது.

ஐபிஎல் போட்டியின் 18வது தொடரின் முதல் போட்டி, வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வு 7 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்பாக 2025 ஐபிஎல் தொடரின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் நடக்கும் கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகார், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா என 13 இடங்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 17-வது சீசனின் தொடக்க விழாவில் டைகர் ஷெராப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இசை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இந்தாண்டும் சினிமா பிரபலங்கள், பாப் பாடகர்கள், நடனக்கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடக்க உள்ளது. பிரபல பாலிவுட் ஜோடியான ஷர்தா கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாட உள்ளனர். 

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் தங்களது இனிமையான பாடல்களால் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் பாலிவுட் பிரபலங்களான சல்மான்கான், ஷாரூக் கான் இருவரும் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர பல்வேறு சினிமா பிரபலங்கள், ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடரின் முதல் போட்டியில், ஷாரூக்கானின் கொல்கத்தா அணி விளையாட உள்ளதால், அவர் கண்டிப்பாக தொடக்க விழாவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. 

வரும் 22ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 25ம் தேதி வரை நடக்கும் ஐபிஎல் திருவிழா, கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயமாக அதிரடி கிரிக்கெட் விருந்தை படைக்கும் என்பது மாற்றுக்கருத்து இல்லை. 

Night
Day