எழுத்தின் அளவு: அ+ அ- அ
2024 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு எவ்வாறு இந்த ஆண்டு அமைந்தது. அவர்கள் படைத்த சாதனைகள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
உலகின் ஒவ்வொரு ஆண்டும் துவங்கும் போது பல்வேறு துறைகளிலும் சாதனை என்பது இலக்காக இருக்கும். அந்த வகையில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு பல சாதனைகளாகவும், சோதனைகளாகவும் அமைந்திருந்தது.
அந்த வகையில் 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் மொத்தமாக 13 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா மொத்தமாக ஆறு பதக்கங்களை வென்றது. முதல் பதக்கத்தை மனு பாக்கர் பெற்று தந்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில், மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். அதே நேரத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மீண்டும் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் இந்திய ஹாக்கி அணியின் தடுப்புச் சுவராக இருந்த ஸ்ரீஜித் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு 29 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர் வீராங்கனைகள் வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற 17 வது ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மேலும் ஓமனில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார் தமிழகத்தின் குக்கேஷ். கிளாசிக்கல் முறையில் நடைபெற்ற இந்த செஸ் தொடரில் 14 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளைப் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். 12 வயதில் கிரான் மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய இவர், தன்னுடைய 18 வயதில் உலக சாம்பியன் என்ற கிரீடத்தை அலங்கரித்தது இந்த ஆண்டில் விளையாட்டு துறைக்கு கிடைத்த பெருமையாக அமைந்தது.
அதேபோல மற்றொரு தமிழக வீராங்கனையான காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என மூன்று பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்று புதிய உலகச் சாம்பியன் என்ற முத்திரையை பதித்தார். 17 வயதான காசிமா சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் இந்த ஆண்டு இந்தியா பல வெற்றிகளை குவித்ததன் மூலம் இந்திய விளையாட்டு துறைக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது.