எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவுக்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் 2- 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இந்திய அணி இழந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் எடுத்தன. 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, போட்டியின் கடைசி நாளான இன்று 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 340 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல், விராத் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ரன் குவிக்கத் தவறினர். இதையடுத்து 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் ஆஸ்திரலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.