51 வயதில் பதக்கம்... துருக்கி ஸ்டைல் மேன் அசத்தல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வீரர், வீராங்கனைகள் கடுமையாக போராடி வெற்றி பெறும் நிலையில், 51 வயது நபர் ஒருவர், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அசர வைக்கும் பின்னணி கொண்ட நபர், ஒலிம்பிக்கில் ஸ்டைலாக செயல்பட்டு வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்ற விதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்கிய 33-வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களின் தேசத்துக்காக போராடி வெற்றிபெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கத்துக்கான போட்டி நடந்தது. மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற போட்டியில் செர்பியாவின் ஜோரானா அருனோவிச் - டாமிர் மைக் இணையை துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணை எதிர்கொண்டது. 

இதில் துருக்கி வீரர்களை 16-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய செர்பியா வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். தோல்வியுற்ற துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

இந்நிலையில், துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை என்றாலும், யூசுப் டிகெக் தனது ஸ்டைலான துப்பாக்கி சுடுதல் விதத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் அதிகம் கவனம் பெற்று அவரது தொடர்பான பதிவுகளும், மீம்ஸ்களும் இணையத்தை தற்போது கலக்கி வருகிறது. 

தனது 5-வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட துருக்கி துப்பாக்கி சுடுதல் வீரர் யூசுப் டிகெக் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். 51 வயதான அவர், துப்பாக்கி சுடுதல் போட்டியின்போது, மற்ற வீரர்களை போல், இலக்கை துல்லியமாக பார்க்க உதவும் லென்ஸ், சத்தம் குறைவாக்க உதவும் ஹெட்போன் போன்ற எந்த உபகரணங்களும் அணியாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமாக காலையில் நடைபயணம் செல்லும் ஒருவர் போல் கேசுவலாக பேன்ட், டி-ஷர்ட் போட்டுக் கொண்டு தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் களமாடினார். பின்னர் எவ்வித மிடுக்கும் இல்லாமல் தனது இணையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் தட்டிச்சென்றார்.

யூசுப் டிகேக்கின் ஆட்டம் உலகளவில் பேசப்பட்டுள்ள நிலையில், அவரின் பின்னணி குறித்த தகவல் பலரையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. துருக்கியின் கோக்சுன் மாவட்டத்தில் உள்ள தசோலுக் கிராமத்தில் பிறந்த யூசுப் டிகெக், முன்னாள் ராணுவ வீரராவார். 2013ம் ஆண்டில், 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் சென்டர்-ஃபயர் பிஸ்டல் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Night
Day