எழுத்தின் அளவு: அ+ அ- அ
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல்லில் 30வது லீக் போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பண்ட் 49 பந்துகளில் 63 ரன்களும், மிட்சல் மார்ஷ் 25 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். பந்து வீசிய சென்னை அணியில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ஷாகித் அகமது ஆகியோர் களமிறங்கி நிதானமாக விளையாடி அவுட் ஆனர். பின்னர், களத்தில் நின்ற துபேவுடன் கேப்டன் தோனி கைகோர்க்க இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19.3 ஓவர்களில் 168 ரன்களை குவித்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எனினும், புள்ளிப் பட்டியலில் எந்த வித மாற்றமும் இல்லை கடைசி இடத்தில் தான் உள்ளது. லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்றிரவு பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை யுவேந்திர மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்யப்படுகிறதாக அல்லது தோல்வியை சந்திக்குமா என ரசிகர்கள் உற்சாகத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.