"போக்குவரத்துக்கு உகந்த சாலையை போடுங்க" 7 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றி போக்குவரத்தை சீர் செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள். சாலையை சீரமைக்காததால், அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

சேலம் மாநகராட்சியின் 20 மற்றும் 22வது வார்டுகளுக்கு உட்பட்ட ரயில்நிலையம் அருகில் உள்ள போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, காட்டூர், அண்ணாநகர், வெள்ளையன் தெரு, சேலத்தாம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சூரமங்கலம் மற்றும் சேலம் மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பழைய சூரமங்கலம் அல்லது சிவதாபுரம் வழியாக 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த பகுதியில் உள்ள ரயில்வே பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் புதுப்பிக்கப்பட்டு, சாலைப் பகுதி அகலப்படுத்தப்பட்டது. இருப்பினும், போக்குவரத்துக்கு உகந்ததாக சாலையை அமைக்காததால், முறையாக சாலையை அமைத்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே ரயில்வே பாலத்தை சீரமைத்தும், சாலை அகலப்படுத்தப்பட்டும், பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சாலையை சீரமைக்காமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். முன்பு ஒருவர் மட்டும் செல்லக்கூடிய குறுகிய வழிப்பாதையாக இருந்தநிலையில், தற்போது சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான சாலை அமைக்காததால், கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மழைக்காலங்களில் போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தின் தடுப்பு சுவரின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்படுவதால், அந்த வழியாக செல்ல முடியாத நிலை உருவாவதாகவும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். சரியான சாலை வசதி இல்லாததால், அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம், சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி வருவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்திப்பதுடன் சில சமயத்தில் உயிரிழப்பு ஏற்படும் நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, காட்டூர், அண்ணாநகர், வெள்ளையன் தெரு, சேலத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் அத்தியாவாசிய தேவைகளுக்காக தினந்தோறும் 7 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், சேலம் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக அரசுக்கும் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, முறையான சாலை அமைத்து, மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்தை சீர் செய்து தர வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day