எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசியல், திரைப்படத் துறை ஆகிய இரண்டிலும், நிகரற்ற புகழோடு விளங்கிய புரட்சித்தலைவி அம்மா, அடியெடுத்து வைத்த அத்தனை துறைகளிலும் வெற்றிகளைக் குவித்து சாதனை படைத்தவர். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; மக்களின் துயரங்களைப் போக்கி அவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்ற அம்மாவின் நீண்டகால லட்சியங்களை சிறப்பாக நிறைவேற்ற அவரது அரசியல் வாழ்க்கை பெரிதும் உதவியது. அரசியல் வாழ்க்கையில் அம்மா நிகழ்த்திய அரும்பெரும் சாதனைகளை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தியின் வழிகாட்டுதலோடு, கலைப் பயணத்தில் வெற்றி வாகை சூடிய புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அரசியல் பயணத்திலும் அவரோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
புரட்சித்தலைவி அம்மாவின் துணிச்சலையும், தீமையை எதிர்ப்பதில் அவர் காட்டிய தீவிரத்தையும் கண்டு வியந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அரசியல் பயணத்தில் முக்கிய இடத்தை புரட்சித்தலைவி அம்மாவுக்கு வழங்கினார். 1982ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மாவை அஇஅதிமுகவில் இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., அடுத்த ஆண்டு அவரை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக புரட்சித்தலைவி அம்மாவை நியமித்தார் எம்.ஜி.ஆர். அம்மாவின் ஆளுமைத் திறன், கழகத்தை கட்டிக்காக்கும் பேராற்றல் ஆகியன அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். தனக்கு பக்கபலமாக செயலாற்ற வேண்டும் என்ற நோக்கில், கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளை அம்மாவுக்கு வழங்கினார்.
அளவற்ற அறிவாற்றல், நிகரற்ற நினைவாற்றல், தன்னிகரில்லா செயல்திறன் ஆகியவற்றால் அரசியலில் சாதனைகளைக் குவித்தார் புரட்சித்தலைவி அம்மா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கால சாதனைகளில் மிக முக்கிய சாதனையாக கருதப்படும் சத்துணவு திட்டத்தில் உயர்மட்டக்குழு உறுப்பினராக, புரட்சித்தலைவி அம்மாவை எம்.ஜி.ஆர். நியமித்ததால், அம்மா, தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு சத்துணவு திட்டத்தை மேம்படுத்த உதவினார்.
1984ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றதற்கு, புரட்சித் தலைவி அம்மாவின், இரவு பகல் பாராத சூறாவளித் தேர்தல் சுற்றுப் பயணம் முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தல்களிலும் புரட்சித்தலைவி அம்மாவின் பங்குபணி அளவிடற்கரியது.
1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திய செய்தி, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பேரிடியாய் இறங்கியது. அஇஅதிமுக முடிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் எக்காளமிட்டன. இக்கட்டான தருணத்தில் வீறு கொண்டு எழுந்த அம்மாவின் துணிச்சலும், அறிவு அடர்த்தியும், எண்ணற்ற மக்களின் பேராதரவும் அம்மாவின் தலைமைக்கு கீரிடம் சூட்டின.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைவைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக மாண்புமிகு அம்மா, கழக நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவேறாக பிரிந்துவிட்ட கழகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விட்டுச் சென்ற அஇஅதிமுக எனும் பேரியக்கத்தின் வேரில் நீருற்றி, இரட்டை இலையை புத்துணர்ச்சி பெற செய்தார் புரட்சித்தலைவி அம்மா.
அசைக்கவே முடியாமல் தமிழ் மக்களின் மனதில் நீங்காமல், உறுதிபட நிலை கொண்டிருந்த மாண்புமிகு அம்மாவின் செல்வாக்கை சீரழிக்க சதித்திட்டம் தீட்டிய தீய மனம் படைத்தவர்கள், வரலாற்றுப் பெருமைமிகு தமிழக சட்டமன்றத்தில் கொடூர செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். சட்டப்பேரவையில் அதர்மமும், அநீதியும் அரங்கேறின. மனிதாபிமானமற்ற மாபாதகர்கள், அம்மாவுக்கு, சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்த போதும், தமிழக மக்களுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் அவற்றையெல்லாம் பொறுமையோடும் தாயுள்ளத்தோடும் தாங்கிக் கொண்டு அரசியல் பயணத்தை தொடர்ந்தார் புரட்சித்தலைவி அம்மா.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு 1991ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் அம்மா.
உன்னத திட்டமான 'தொட்டில் குழந்தை திட்டத்தை ' அம்மா செயல்படுத்தி, நாடு முழுவதும் பாராட்டை பெற்றார். அவரது தாயுள்ளத்தை உலகமே வியந்து பாராட்டியது.
2001ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற அம்மா, தமது சாதனைத்திட்டங்களை தொடர்ந்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவி அம்மாவின் தன்னிகரற்ற தலைமையின் கீழ் அஇஅதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
நீண்ட காலமாக நிலவி வந்த காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட, மாண்புமிகு அம்மா, இடையறாத தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. புரட்சித்தலைவி அம்மாவின் இந்த வரலாற்று சாதனையைப் பாராட்டும் வகையில் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகளின் அமைப்புகள் சார்பில் தஞ்சை தரணியில் நடைபெற்ற, பிரமாண்ட பாராட்டு விழாவில், அம்மாவுக்கு, ' பொன்னியின் செல்வி' என்ற சிறப்புக்குரிய பட்டம் வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக புரட்சித்தலைவி அம்மா நடத்திய நீண்ட நெடிய சட்டப் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. இதேபோன்று கேரள மாநிலத்துடன் நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்தி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தி சாதனை படைத்தார் புரட்சித்தலைவி அம்மா.
தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்களின் பேராதரவோடு அஇஅதிமுக தனித்து நின்று 37 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அகில இந்திய அளவில் 3வது மிகப்பெரிய கட்சியாக அஇஅதிமுக உருவெடுத்தது. இந்த சாதனைகள் எல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் சீர்மிகு சிந்தனை, சிறப்பான செயல் திறன், தன்னிகரற்ற ஆளுமை ஆகியவற்றால் சாத்தியமானது.
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற தாரக மந்திரத்துடன் தமிழக மக்களின் நலனுக்காக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் அயராமல் பாடுபட்ட புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையின் கீழ், அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.