அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புகள் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி...

எழுத்தின் அளவு: அ+ அ-

அடிப்படை வசதிகளும் எந்தவித சுகாதாரமும் இல்லாததால் திருச்சியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளிம்புநிலை மக்கள் என்பதால் விளம்பர திமுக அரசு தங்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள். அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் படும்பாடு குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

சுகாதாரமற்ற குடிநீர்... குவியல் குவியலாக குப்பைகள்... நிரம்பி வழியும் கழிவுநீர்... என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காணப்படும் திருச்சி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தற்போதைய நிலைதான் இது. 

வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத விளம்பர திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அந்த வகையில் திருச்சியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். 

திருச்சியில் குடிசை மாற்று வாரியம் மூலம் நகர்ப்புற சாலையோரங்களில் குடிசையில் வசித்து வந்த மக்களுக்காக, பல அடுக்குகளை கொண்ட வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கரை, செங்குளம் காலனி, பீச்சாங்குளம், ஜெயில்பேட்டை, கல்மந்தை, வண்ணாரப்பேட்டை, இருங்களுர், பஞ்சகரை சாலை, வண்ணாரப்பேட்டை மற்றும் நாகமங்கலம் ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். 

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும்நிலையில், அவ்வாறு வீடுகள் கிடைக்கப் பெற்ற வீடுகளும் அடிப்படை வசதிகள் இருப்பதால் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள். 

குடிநீர் சரியாக வருவதில்லை, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை, தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றுவதில்லை என புகார்களை அடுக்குகின்றனர் அங்கு வசிப்பவர்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத பிரச்னை ஒருபுறம் இருக்க மறுபுறம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும் அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேறுவழியின்றி இங்கு வசித்து வருவதாக அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என்பதும் அவர்களுளை குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று  வாரியத்தின் பெயரை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மட்டும் தான் திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளதே தவிர மற்றபடி எந்த முன்னேற்றமும் இல்லை என்பது குடியிருப்பு வாசிகளின் குமுறலாக உள்ளது.

மாவட்ட நிர்வாகமும், மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கே என் நேருவும் தங்களுடைய பிரச்னைகளை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டும் அவர்கள், இனியாவது விளம்பர திமுக அரசு தங்களுக்கு விடியலை ஏற்படுத்தி தருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Night
Day