அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்... வழக்கு லிஸ்டின் லேட்டஸ்ட் அப்டேட் ஐ.பெரியசாமி...!

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் விடுவிப்பு ரத்து செய்யப்படும் நிலையில் அடுத்த அமைச்சரவை கூட்டம் புழல் சிறையிலா? திகார் சிறையிலா? என கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது திமுக...

நீதிமன்றங்களில் வழக்கு ரேடார்களில் சிக்கியிருக்கும் திமுக அமைச்சர்களின் லிஸ்டில் லேட்டஸ்ட் அப்டேட்-ஆக இணைந்திருப்பவர் வேறுயாருமில்லை அமைச்சர் ஐ.பெரியசாமி தான்..!

கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 4 பேரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு மேல் முறையீடு செய்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

அதுமட்டுமின்றி குற்றச்சாட்டை பதிவு செய்து தினந்தோறும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி தவிக்கும் திமுக அமைச்சர்களின் வட்டம் விரிவடைந்துள்ளது.

ஏற்கெனவே திமுக அமைச்சர் துரைமுருகன் மீது பதியப்பட்ட இரண்டு சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்ததை அடுத்தடுத்து ரத்து செய்து ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம் தற்போது ஐ.பெரியசாமியையும் அந்த லிஸ்டில் இணைத்துள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் கெடு விதித்துள்ளது. அதுமட்டுமா.. சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, உச்சநீதிமன்றத்தின் தண்டனை நிறுத்தி வைப்பால் சிறை செல்வதில் இருந்து நூலிழையில் தப்பினாலும் வழக்கின் பிடியில் இருந்து மீளவில்லை. போதாகுறைக்கு அமலாக்கத்துறை சோதனை ,விசாரணை என சிக்கி சின்னாபின்னமானவர், வாயை வைத்து சும்மா இல்லாமல் மத குறியீடுகள் குறித்து பேசி சர்ச்சையில் வாண்டடாக சிக்கி தற்போது அமைச்சர் பதவியையே இழந்து நிற்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்திருந்த நிலையில் அதனை ரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து இருவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இதில் அமைச்சர் கே.என்.நேரு-வின் கூடாரத்துக்குள் நுழைந்த அமலாக்கத்துறை கைது என்னும் அஸ்திரத்தை நோக்கி அவர் மீதான பிடியை இறுக்கி வருவது ஷாக்க குற ஷாக்க குற ரகம் தான். 

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை கையில் எடுத்திருக்கும் அமலாக்கத்துறையின் விசாரணையால் நொந்து சுண்ணாம்பாகி கிடக்கிறார். அதுமட்டுமா அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த லிஸ்டில் பிரதானமாக இருப்பவர் செந்தில் பாலாஜி தான். இப்படி திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை புழல் சிறையில் நடத்தும் அளவுக்கு வழக்குகளில் சிக்கி கிடக்கின்றனர் அக்கட்சி அமைச்சர்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறை செல்வது உறுதி என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ள நிலையில் அறிவாலயம் மரண பீதியில் இருப்பதாகவே தெரிகிறது.

Night
Day