அட்டாரி - வாகா எல்லை மூடல்.. இந்தியா - பாகிஸ்தானுக்கு என்னென்ன பாதிப்புகள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அட்டாரி - வாகா எல்லை மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பு மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பலர் தங்களது வேலைகளை இழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அட்டாரி - வாகா எல்லை மூடலினால் இந்தியாவிற்கு என்ன பாதிப்பு? அட்டாரி - வாகா எல்லையின் சிறப்பம்சம் என்ன? விரிவாக பார்க்கலாம்...

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியா - பாகிஸ்தான் எல்லையான பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லை சோதனைச் சாவடியையும் உடனடியாக மூடுவது போன்ற பல அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரே அனுமதிக்கப்பட்ட சாலை வழி வர்த்தக பாதைதான் இந்த அட்டாரி -வாகா எல்லை. சுற்றுலா ரீதியாகவும் இந்த எல்லை மிக முக்கியமானது. அட்டாரி -வாகா எல்லையில் தினமும் மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் கொடியிறக்கம் நிகழ்வை பார்க்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

இதுதான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரே சாலை வழி வணிக பாதை என்பதால் இந்த எல்லை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் தற்போது அட்டாரி எல்லையை மத்திய அரசு மூடியிருப்பதால், பாகிஸ்தான் மிகுந்த பாதிப்பை சந்திக்க உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் குறைவாகவே உள்ளது, என்றாலும் இந்த மூடல் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தையை நம்பியிருப்பதால் பாகிஸ்தான் இதில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

2023 - 24 ஆண்டில் இந்த வணிகப் பாதை வழியாக 3 ஆயிரத்து 886 கோடியே 53 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது என்றும் 71 ஆயிரத்து 563 பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்திக்க கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அட்டாரி எல்லை மூடப்படுவதால் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகும் அதேநேரம் இந்தியாவும் சிக்கல்களை சந்திக்க கூடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 
 
அதாவது இந்த எல்லை வழியாகவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா காய்கறிகள், சோயா பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், பாறை உப்பு, சிமென்ட் போன்றவை இந்த வழியாகத் தான் வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வழி தான் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்காக மிக முக்கிய பாதையாகவும் உள்ளது. இந்த எல்லை மூடப்படுவதால் இந்தியாவின் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைய கூடும். 

இதனை சமாளிக்க வேண்டுமானால் இந்தியா ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு விரைவில் வேறு வழியை கண்டுபிடிக்க வேண்டும். பாகிஸ்தான் உடனான வர்த்தகத்திற்கு மாற்றாக வேறு நாடுகளை வர்த்தகத்திற்கு தேட வேண்டிய கட்டாயமும் உள்ளது. அப்போது தான் இந்த வர்த்தக நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். 

varient
Night
Day