எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் வீடு வழங்க இருபதாயிரம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இக்குற்றச்சாட்டின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
தென்காசி மாவட்டத்தில் அரசின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் பங்கேற்று வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ஆலங்குளம் பகுதியில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சி தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த வள்ளியம்மாள், அமைச்சரிடம் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் கேட்டவாறு இருபதாயிரம் ரூபாய் கொடுத்தால் தான் வீடு கட்டுவதற்கான பணியாணையை வழங்குகிறார்கள் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து மனுவையும் வழங்கினார். திமுக ஊராட்சிமன்றத் தலைவியின் இந்த குற்றச்சாட்டால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனது புகார் குறித்து பேசிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மாள், 40 ஆண்டுகளாக தங்களின் குடும்பம் திமுகவின் விசுவாசியாக உள்ளதாகவும் ஆனால் தங்கள் ஊராட்சிக்கு 30 வீடுகள் கேட்டு மனு அளித்த நிலையில், 8 வீடுகள் மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்கும் போது இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பணியாணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளை அக்கட்சியினரே அம்பலப்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளம்பர முதலமைச்சரோ நீட் ஒழிப்பு, மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு என தேர்தலுக்காக நாடகமாடி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.