எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டைகளை பதுக்கியது குறித்து கேள்வி கேட்ட மாணவனை, வகுப்பறைக்குள் நுழைந்து சத்துணவு பணியாளர்கள் துடைப்பத்தால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவும் அதோடு சேர்த்து முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சத்துணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் முட்டைகள் வெளிச் சந்தைகளில் சட்டவிரோதமாக விற்கப்படுவது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிக குறைந்த விலையில் வாங்கப்பட்டு ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசுப் பள்ளி ஒன்றில் சத்துணவு முட்டைகள் பதுக்கப்படுவதை தட்டிக் கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் போளூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 44 மாணவ மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணி புரிந்து வருகின்றனர்.
இதில் பள்ளி மாணவர்களுக்கென சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு சத்துணவு சமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவில் மாணவர்களுக்கு தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சரிவர முட்டை வழங்குவது இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சாப்பிடும் போது முட்டை இல்லாததை அடுத்து மாணவன் ஒருவன், சமையலறைக்கு நேரடியாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளான். அப்போது அங்கு முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன், முட்டையை வைத்துக் கொண்டே இல்லை என்கிறீர்களே என சமையல் உதவியாளரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மற்ற மாணவர்கள் முன்னிலையில் மாணவனை வசைபாடியதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் வகுப்பு துவங்கியதும், வகுப்பறைக்குள் அத்துமீறி புகுந்த சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் இருவரும் மாணவன் மீது சக மாணவர்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தினர். பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை தடுத்தும் கட்டுப்படாத அவர்கள், நீதி கேட்ட அந்த மாணவனை வசைபாடியபடி, துடைப்பத்தால் அடித்தனர்.
அனுமதியில்லாமல் எப்படி சமையலறைக்கு உள்ளே சென்று பார்த்தாய் எனக் கூறி சமையலரும் சமையல் உதவியாளரும் மாணவனை துடைப்பத்தால் அடித்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து சத்துணவு அமைப்பாளர் புகாரின் பேரில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை குறித்து கேள்வி எழுப்பிய மாணவனை, சமையலரும் சமையல் உதவியாளரும் துடைப்பத்தால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.