எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குவேந்திரன் மற்றும் ஜமீன் பிரபு ஆகிய இருவரும் ஆர்மி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளனர். இம்மையத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி, உணவு துறை, விவசாயத்துறை என பல்வேறு துறைகளில் முக்கியமான பொறுப்பு வாங்கி தருவதாக கூறி பத்து லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலும் பல கோடி ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுள்ளனர். மேலும் போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்து வழங்கியும் மக்களை ஏமாற்றி உள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிலர் குவேந்திரனிடம் கேட்ட போது பணத்தை தராமல் அலட்சியமாக பதில் அளித்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். ஆனால் அங்கோ அரசு வேலைக்காக பணம் கொடுத்ததால் நீங்கள் தான் முதல் குற்றவாளி... என கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் காவல் ஆணையர். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தால் இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்டவர்கள், மோசடி குறித்து பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்தனர். தங்களை தொலைபேசியில் அழைத்து கொலைமிரட்டல் விடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் பாதிக்கப்பட்டவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
மகனின் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என நினைத்து தான் அவர்களுக்கே தெரியாமல் பணம் கொடுத்ததாகவும், ஆனால் காவல்துறை நாங்கள் தான் குற்றவாளி என கூறுவதாக வேதனையுடன் கூறிய பாதிக்கப்பட்டவரின் தாய், பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்து தவிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தருமா? என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.