எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 10ம் வகுப்பு படித்த பெண் ஊழியர் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை இயக்கியது மற்றும் நோயாளிகளிடம் தூய்மை பணியாளர்கள் பணம் வசூலித்ததை தட்டி கேட்டதன் காரணமாக தாக்கப்பட்டதாக லேப் டெக்னீசியன் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததை இந்த செய்திதொகுப்பில் காணலாம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி ராஜபாளையத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் நுண் கதிர்வீச்சாளர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது எக்ஸ்ரே மையத்தில் வெளி நோயாளிகளுக்காக மருத்துவ பதிவு சீட்டு எழுதி கொடுக்கும் 10ம் வகுப்பு மட்டுமே படித்த ப்ரியா, எந்தவித கல்வித் தகுதியும் இல்லாமல் எக்ஸ்ரே இயந்திரத்தை இயக்கியதுடன் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ராஜு நீங்கள் லேப் டெக்னீசியன் படிப்பு படித்துள்ளீர்களா என கேட்டுள்ளார். அவர் சிரித்துக் கொண்டே பழகிக்கொண்டதுதான் என கூறி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதோடு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே எடுக்க வரும் ஏழை எளிய நோயாளிகளிடம் தூய்மை பணியில் ஈடுபடும் பல்நோக்கு பணியாளர்கள் அடாவடி லஞ்சம் வசூலித்ததையும் ராஜூ தட்டிக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவ அலுவலர் இளங்கோவனிடம், ராஜு புகார் தெரிவித்துள்ளார். புகாரைக் கேட்ட மருத்துவ அலுவலர் சற்று எரிச்சல் அடைந்ததோடு, அதனை மனதில் வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கில் இருந்ததாக ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உமா மகேஸ்வரி என்ற தூய்மை பணியாளரை எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் அனுப்பி தன்னிடம் பிரச்சனை செய்ததாகவும், அதன்படி, உமாமகேஸ்வரி காலணி அணிந்து வந்த போது, அதனைத் தட்டிக்கேட்டதோடு, ராஜூ அவரை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வவரி, இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்ததோடு சக ஊழியர்களை வைத்து ராஜூவை தாக்கியுள்ளார்.
எனவே தாக்குதலுக்கு தூண்டிய மருத்துவ அலுவலர் இளங்கோவன் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்நோக்கு பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
இதே போன்று உமா மகேஸ்வரியை செருப்பால் தாக்கிய சம்பவத்தில் ராஜூவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. எனவே போலீசார் குற்றத்தை தீர விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.