எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே குடிநீர் விநியோக நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை நையபுடைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர் நிறுவனத்தினர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
திரைப்படங்களில் வருவது போல உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து குடிநீர் விநியோக நிறுவனத்திடம் போலி அதிகாரி பணம் கேட்கும் காட்சி தான் இவை...
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள இடையப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் கஸ்தூரி. இவர் துவரங்குறிச்சி அருகே செயல்படும் குடிநீர் விநியோக நிறுவனத்திற்கு சென்று, திருச்சி பாலக்கரையிலிருந்து வருவதாகவும், தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி எனவும் கூறி பணம் கேட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2 மாதங்களுக்கு முன் வந்து பணம் வாங்கி சென்றதால் இவர் ஒரு போலி அதிகாரி என்பதை அறிந்த குடிநீர் விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் மெதுவாக பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது, தான் வாங்கும் பணம் உள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் வடிவேல் ஆரம்பித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும், குறிப்பாக ஆட்சியருக்கும் செல்வதாக பீலா விட்டிருக்கிறார் உருட்டு மன்னன் வெங்கடேஷ்.
கடைசியில் தான் செக்கிங் வந்திருப்பதாக கூறி பணம் கேட்க, போலி அதிகாரியை நைய புடைத்து, இனி இந்த பக்கமே வரக்கூடாது என நிறுவனம் சார்பில் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
போலி உணவு பாதுகாப்பு அதிகாரியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பாதுகாப்பு அதிகாரி வடிவேல், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் போலி அதிகாரி மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரியான வெங்கடேஷை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.