எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் ஒரு மாதத்திற்கும் மேலாக மந்தமாக நடைபெறும் தொட்டி பாலம் அமைக்கும் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. உரிய மாற்று வழி இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான சாலையில் பாதி அளவுக்கும் மேல் தோண்டப்பட்ட சாலைகளில் தட்டு தடுமாறி வாகனங்கள் செல்லும் காட்சி தான் நாம் காண்பது...
போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பகல் நேரங்களில் நடைபெறும் சாலை மற்றும் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயிலில் இருந்து ராமையன்பட்டி விலக்கு செல்லும் சாலை புதிதாக போடப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், அந்த சாலை பாதாளசாக்கடைத் திட்டப்பணிகளுக்காக ஒரு மாதத்திற்கு முன் தோண்டப்பட்டது. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்த அந்த சாலை ஓராண்டுக்கு முன் சீரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே சாலை பெயர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்து உள்ளனர். பெயர்ந்து கிடக்கும் அந்த சாலையால் ராஜபாளையம், சங்கரன்கோயிலில் இருந்து நெல்லை வரும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. பகல் நேரத்தில் சாலை பணிகள் மேற்கொள்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் கடந்த மாதம் 1ம் தேதி தொட்டி பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சந்திப்பில் இருந்து மார்க்கெட் வரையும், சமாதானபுரம் சந்திப்பில் இருந்து நீதிமன்றம் வரையும் 6 புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப்பணிகள் நடந்து வருவதால் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை இலகுரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்த மாநகர போக்குவரத்துத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதாவது பாளையங்கோட்டை, கேடிசி நகர், சீனிவாசன் நகர் வழியாக சமாதானபுரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைகிரவுண்ட் ரவுண்டானா சென்று பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்குச் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அனைத்து வாகனங்களும் நெல்லை- திருச்செந்தூர் சாலை வழியாகவே சென்று வருவதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். உரிய மாற்று வழி இல்லை என்பதே வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொட்டி பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் முருகன்குறிச்சி சந்திப்பில் இருந்து மார்க்கெட் வரையும், சமாதானபுரம் சந்திப்பில் இருந்து நீதிமன்றம் வரை செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. நெல்லை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வாய்க்கால் பால பணிகளை இரவு நேரங்களில் மேற்கொண்டு விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.