எழுத்தின் அளவு: அ+ அ- அ
போலி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஆபாச புகைப்படம், வீடியோ, செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த சென்னையை சேர்ந்த செல்போன் நிறுவன ஊழியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய இளைஞர்களிடையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. முகமறியாதவர்களிடம் கூட நட்பு பாராட்டி வருகின்றனர். ஆடல், பாடல், பேச்சு என தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் பிளாட்பார்ம் ஆகவும் சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி ஏராளமான நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அதே நேரத்தில் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம், புதுச்சேரி பெண்ணுக்கு நடந்திருக்கிறது.
புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் நவீன தொழில்நுட்ப உதவியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக இருக்கும் பெண்களுக்கு நார்மலாக பேசி, சிறிது நாட்கள் கழித்து ஆபாசமாக பேசுவதும், ஆபாச வீடியோ, செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பாஸ்கரனை அதிரடியாக கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து பேசிய சைபர் கிரைம் போலீசார், சோசியல் மீடியாவில் முகம் தெரியாத நபர்களுடன் பேசவேண்டாம் என்றும் பெண்கள் தங்களின் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு எந்த ஒரு புகைப்படத்தையும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடும்போது பிரைவேட் அக்கவுண்டாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்ரதியுள்ள சைபர் கிரைம் போலீசார், அப்படி புகார் கொடுக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
முகம் தெரியாத பெண்ணுக்கு ஆபாச வீடியோ, செய்தி அனுப்பிய சென்னையை சேர்ந்த இளைஞரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.