எழுத்தின் அளவு: அ+ அ- அ
லட்சக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த, வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் ஃபிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மர சவப்பெட்டியில் பாரம்பரிய உடையுடன் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து 23-ம் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 3 நாட்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் போப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படும் நிலையில் நேற்று மாலை போப் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மூடப்பட்டது.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து, இந்தியநேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்குகள் தொடங்கின. கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த திருப்பலிக்கு கார்டினல்ஸ் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போப்பின் சொந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலே, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொண்டர் லேயன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
2 மணி நேரம் நீடித்த திருப்பலி முடிந்ததைத் தொடர்ந்து போப் பிரான்சிஸின் இறுதி விருப்பத்தின்படி, புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தைப் யாரும் பின்தொடர முடியாது என்பதால் சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்கள், கைகளைத் தட்டி போப் பிரான்சிஸுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசலிக்கா பேராலயத்திற்கு போப் பிரான்சிஸின் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 40 புலம்பெயர்ந்தோர், கைதிகள், வீடற்ற நபர்கள் மற்றும் திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒரு வெள்ளை ரோஜாவை ஏந்தி சவப்பெட்டியை வரவேற்றனர். இதையடுத்து போப் பிரான்சிஸின் விருப்பப்படியே அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையில் அமைக்கப்பட்ட கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வழக்கமாக தங்களது பதவிக் காலத்தில் மறையும் போப்பாண்டவரின் உடல், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தின் கீழ்ப் பகுதியில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் வாடிகனுக்கு வெளியே எந்தவித ஆடம்பரமும் இல்லாத எளிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.