இருட்டுக்கடையை எழுதிக் கேட்பதாக புகார்... வெளியான புதிய தகவல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாக எழுதி கேட்பதாக தனது சம்பந்தி மீது அதன் உரிமையாளர் கவிதா சிங் புகார் அளித்த நிலையில் அந்த புகாரை முற்றிலும் மறுத்திருந்தார் கோவையை சேர்ந்த வழக்கறினரும் சம்பந்தியுமான யுவராஜ் சிங். இந்த குற்றச்சாட்டின் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதை விரிவாக பார்க்கலாம்..  

திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றான புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங். அவரது மகள் கனிஷ்காவுக்கும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ் சிங்கின் மகன் பல்ராம் சிங்குக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் பிரம்மாண்ட செட் போல, மேடை அமைத்து ஆடல் பாடல் என பணத்தை வாரி இறைத்து நடந்த திருமணம் பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது..

இப்படி ஆடம்பரமாக நடந்த திருமணத்தின் சுவடுகூட மறையவில்லை, அதற்குள் கருத்து வேறுபாட்டால் கனிஷ்கா தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மகளை வரதட்சனை கேட்டு அவரது கணவர் பல்ராம் சிங்கும் மாமனார் யுவராஜ் சிங்கும் கொடுமைப்படுத்துவதாக கூறி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் நெல்லை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் புகழ்பெற்ற இருட்டுக்கடையை வரதர்சணையாக எழுதி கொடுக்குமாறு மாப்பிள்ளை குடும்பத்தினர் நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
 
ஆனால் கவிதா சிங்கின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த சம்பந்தி யுவராஜ் சிங், 4 தலைமுறைக்கு தன்னிடம் சொத்துக்கள் இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் IMPORTER BIKE-ன் விலை கூட இருட்டுக்கடையின் வருமானத்துக்கு ஈடாகாது எனக்கூறி வரதட்சனை என்னும் புகாரை முற்றிலும் மறுத்திருந்தார். 

மகளின் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் வீட்டுக்கே அந்த பெண்ணை அழைத்து வந்து தன் மகளையே சேவகம் செய்ய வைப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார் கவிதா சிங். அதேநேரம் மருமகள் கனிஷ்காவின் நடத்தை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் யுவராஜ் சிங். 

அதுமட்டுமின்றி ஒன்றரை கோடி மதிப்புள்ள DEFENDER காரை DOWRY-யாக கேட்பதாகவும், மகளின் பெயரில் DEFENDER கார் புக் செய்யப்பட்டு REGISTRATION-னுக்கு தயாராக இருப்பதாகவும் கவிதா சிங் ஆதாரத்தை நீட்ட, யுவராஜ் சிங்கும் தன் பங்குக்கு DEFENDER காரை மகனின் பேரில் தனது சொந்த பணத்தில் புக் செய்ததாக ஆதாரத்தை நீட்டினார்.

குறிப்பாக சாதாரண குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று தான் அந்த பெண்ணை கல்யாணம் செய்தோம். 350 நாளுக்கு முன்னர்தான் கவிதா சிங்கின் கைக்கு இருட்டுக் கடை வந்தது, அதற்கு முன் ஒரு மெக்கானிக்கின் மனைவி தான் அவர் என யுவராஜ் சிங் கூறியது தான் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.  

இப்படி மாறிமாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மையில் பல்ராம் சிங்-கனிஷ்கா திருமணம் எங்கிருந்து ஆரம்பித்தது என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துக்கொண்டதை தொடர்ந்து அந்த கடைக்கான வாரிசுதாரர்களாக மாறியுள்ளனர் கவிதா சிங் மற்றும் அவரது சகோதரர் நயன் சிங். இதில் நயன் சிங் ஏற்கெனவே ஸ்வீட்ஸ் பிசினஸில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்க, இருட்டுக்கடையை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க கவிதா சிங்குக்கு வழக்கறிஞர் என்ற முறையில் அறிமுகம் ஆனவர் தான் கோவையை சேர்ந்த யுவராஜ் சிங் என கூறப்படுகிறது.

இந்தசூழலில் இருட்டுக்கடையின் தினசரி வருமானம் முதற்கொண்டு ஆண்டு TURN OVER வரை அனைத்தையும் தெரிந்துக்கொண்ட யுவராஜ் சிங், இருட்டுக்கடை கவிதா சிங்கின் கட்டுப்பாட்டுக்குள் வர உறுதுணையாக நின்றதோடு, தனது மகனையும் தேடிப்போய் கனிஷ்காவுக்கு மணம் முடித்து வைத்ததாக தெரிகிறது.

யுவராஜ் சிங்கின் சொத்துக்களை காட்டிலும் இருட்டுக்கடை மூலம் வரும் வருமானமும், அதன் பின் புலத்தில் இருக்கும் சொத்து மதிப்பும் மிக மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் தாலி கட்டிய கையோடு இருட்டுக்கடையை தனது மகன் பெயரின் எழுதி வைக்குமாறு யுவராஜ் சிங் மணமேடையில் வைத்தே தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் கவிதா சிங். 

இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைக்க, போலீசார் விசாரணைக்குப்பிறகே உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day