எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 11வது தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த வி.நாராயணன்?, அவர் கடந்த வந்த பாதையை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்துள்ளது மத்திய அரசு.
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன், வரும் 14ம் தேதி பதவியேற்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். தற்போது கேரள மாநிலம் வலியமலாவில் உள்ள இஸ்ரோவின் Liquid Propulsion Systems எனப்படும் திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக வி. நாராயணன் உள்ளார்.
ஏறக்குறைய 40 ஆண்டு கால அனுபவம் கொண்ட வி. நாரயணன், இந்தியாவுக்கான தெளிவான பாதை எங்களிடம் உள்ளது, எங்களிடம் சிறந்த திறமை இருப்பதால் இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இஸ்ரோவின் மூத்த இயக்குனரான வி. நாராயணன் தலைமையிலான LPSC, ஏவுகணைகளுக்கான திரவம், செமி-கிரையோஜெனிக் மற்றும் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு உள்பட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார் வி நாராயணன்.
இஸ்ரோவின் ஜிஎஸ்.எல்.வி மாக் 3 ராக்கெட் திட்டத்திற்கு CE20 கிரையோஜினிக் என்ஜின் உருவாக்கியதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதித்யா விண்கலம், மற்றும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ராக்கெட் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் இவர் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் வரும் 2026ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி. நாராயணனுக்கு அடுத்தடுத்து பல முக்கிய ப்ராஜெகெட்கள் உள்ளன.
தமிழ்வழிப் பள்ளிகளில் படித்த நாராயணன், கோரக்பூர் ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றார். ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்தபோது சிறந்த மாணவராக விளங்கிய இவர், முதல் ரேங்குடன் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோல்டு மெடலும், இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை நிபணராக 1984ல் இஸ்ரோவில் சேர்ந்த வி நாராயணன் 2018ல் LPSC இயக்குநராக உயர்ந்தார்.
தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு முன்னதாக பதவி வகித்த, கே. சிவனும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. வி நாராயணன் தலைமையில் இஸ்ரோ மேலும் மேலும் பல்வேறு உயரங்களை எட்டும் என்பது உறுதி.