ஊக்க மருந்தால் உயிர் போனதா! பாடி பில்டருக்கு நேரிட்ட விபரீதம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊக்க மருந்து ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கட்டுமஸ்தான இளைஞர் எப்படி உயிரிழந்தார்? என்ன நடந்தது?  என்பது குறித்து இச்செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ராம்கி. இவரின் முதல் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து, 2வதாக வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பாடி பில்டிங்கில் அதீத ஆர்வம் கொண்ட ராம்கி, ஆணழகன் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணத்தில் காலடிப்பேட்டையில் உள்ள ஜிம்மில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.  

கடந்த 6 மாதங்களாக அந்த ஜிம்மிற்கு ராம்கி சென்று நிலையில் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஊக்க மருந்தை ஊசியாக தொடர்ந்து செலுத்திக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவரது 2 சிறுநீரங்கங்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இளைஞர் ராம்கி செவ்வாய் கிழமை பரிதாபகமாக உயிரிழந்தார். 

ராம்கியின் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மருத்தமனையில் இருந்து அவரது உடலை பெறப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் பரிந்துரையின்றி, ஊக்க மருந்து ஊசி இளைஞர் ராம்கிக்கு எப்படி கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய உறவினர்கள், ஜிம் பயிற்சியாளர், ஊக்க மருந்து சப்ளை செய்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இதுதொடர்பாக காசிமேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். 

இதனிடையே, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே ராம்கியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது...

Night
Day