எழுத்தின் அளவு: அ+ அ- அ
கெட்டுப்போனவன் நல்லா வாழலாம்.. ஆனா நல்லா வாழ்ந்தவன் கெட்டுப்போக கூடாது என ரஜினிகாந்த் பேசிய வசனத்தைப்போல, இங்கு நாம் சிறு வயதில் பார்த்து ரசித்த ஒரு ஆகச்சிறந்த நடிகர், தற்போது உடல் மெலிந்து, சடை முடியுடன் டை அடித்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். அவரின் இந்த நிலைக்கு காரணம் என்ன? அவர் உடல் எடையை குறைத்ததற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, இறுகப்பற்று, மாநகரம், உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீ. அவர் நடித்த படங்களின் கதாப்பாத்திரங்களை அவர் தேர்வு செய்தாரா? அல்லது அந்த கதாப்பாத்திரங்கள் அவரை தேர்வு செய்ததா? என சொல்லும் அளவிற்கு எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை கனக்கட்சிதமாக ஏற்று நடிக்க கூடியவர் தான் இந்த ஸ்ரீ.
வானத்தையும் எட்டிப்பிடித்தேன் பூமியையும் சுற்றி வருவேன் என்ற பாடல் தொடங்கி ஆள சாட்சி புட்ட கண்ணால என்ற பாடல் வரை இன்று கேட்டாலும் நினைவுக்கு வருவது அதன் இசை மட்டுமல்ல, அதில் தன் திறனை முழுமையாக வெளிப்படுத்திய நடிகர் ஸ்ரீயும் தான்...
ஒவ்வொரு படங்களுக்கு இடையிலும் சில வருடங்கள் அவர், இடைவெளி விட்டு நடிப்பதுண்டு, அப்படியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தில் நடித்திருந்த அவர், 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இறுகப்பற்று படத்தில் நடித்தார். இந்த இடைவெளிக்கு காரணம் நடிகர் ஸ்ரீயின் கதைத்தேர்வா? அல்லது இயக்குநர்கள் அவரை பயன்படுத்த தயங்குகிறார்களா என்பது கேள்விக்குறியே...
இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காத அவர், தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதுடன் அறைகுறை ஆடைகளுடன் ஆபாசமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் பிரபலங்களுக்கு ப்ளூ டிக்டு இருப்பது வழக்கம். ஆனால் நடிகர் ஸ்ரீ அவரது பெயரின் பின்னால் அவரே ப்ளூ டிக்டு என சேர்த்துக் கொண்டிருப்பது, அவர் மன ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து இருப்பதாகவும், அவரை நல்ல மருத்துவரை சந்திக்கும் படியும் கூறி வருகின்றனர். சிலர் அவருக்கு நெருங்கியவர்கள் யாரேனும் அவரை சந்தித்து வரும்படியும் அறிவுரை வழங்குகின்றனர்.
மற்றொரு பக்கம், நடிகர் ஸ்ரீ ஒரு பேட்டி கொடுத்தாலே அதில் தெள்ளத்தெளிவாக பேசக் கூடியவர், இந்நிலையில் இம்மாதிரியாக அவர் வீடியோ பதிவிடுவதற்கும், உடல் எடையை குறைத்ததற்கும் பின்னால் வேறேதும் காரணங்கள் இருக்கலாம் அல்லது அடுத்த பிராஜெக்டுக்காவது இம்மாதிரியான எதாவது சேட்டையில் அவர் இறங்கியிருக்காலம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ, இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குறிய நாயகனாக இருந்த நடிகர் ஸ்ரீ. இம்மாதிரியான வீடியோ போட்டதும், சமூக வலைதளங்களில் எல்லாமே அவருடைய பேச்சுகள் தான், இதிலிருந்தே அவர் ரசிகர்களின் மனதில் எந்த மாதிரியான இடத்தை பிடித்திருக்கிறார் என்பதை அறிந்து, செயல்படுவார் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது.